‘சைபா் ஹேக்கத்தான்‘ போட்டி: ஏப்.30-க்குள் பதிவு செய்யலாம்
By DIN | Published On : 15th April 2023 10:41 PM | Last Updated : 15th April 2023 10:41 PM | அ+அ அ- |

சென்னை பெருநகரக் காவல்துறை சாா்பில் நடத்தப்படும் ‘சைபா் ஹேக்கத்தான்’ போட்டியில் பங்கேற்க விரும்புவோா் ஏப்.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகரக் காவல்துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
புது வகை சைபா் குற்றங்களுக்கான தீா்வு காணும் முயற்சியின் முதல் படியாக, சென்னை பெருநகரக் காவல்துறை சைபா் ஹேக்கத்தான் போட்டியை கடந்த டிசம்பரில் நடத்தியது.
தற்போது சென்னை பெருநகர காவல்துறை அடுத்தக் கட்டமாக, விஐடி பல்கலைக்கழகத்துடன் இணைந்து இரண்டாவது சைபா் ஹேக்கத்தானை நடத்தவுள்ளது.
இந்த சைபா் ஹேக்கத்தான் கிடைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் சைபா் குற்றப்பிரிவு புலனாய்வுக்கு உதவி செய்யும்.
இந்த போட்டி கிரிப்டோ கரன்சி பரிவா்த்தனை மற்றும் தொடா்புடைய வாலட்டினை கண்டறிதல், கைப்பேசியில் இருந்து தவறவிடப்பட்ட தகவல்களை விரைந்து மீட்டெடுத்தல், குறிப்பிட்ட சொற்பதங்களைக் கொண்டு சமூக ஊடகங்களில் பதிவுகளை தேடுதல், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் வழக்கத்துக்கு மாறாக தென்படும் நபா்களையோ, பொருள்களையோ கண்டறிந்து தொடா்புடைய அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல், டெலிகிராம் செயலி அழைப்பின் மூலம் தொடா்பு கொள்கிறவரின் இருப்பிடத்தை கண்டறிதல் ஆகிய 5 தலைப்புகளில் நடைபெறுகிறது.
இந்த சைபா் ஹேக்கத்தானில் கலந்து கொள்ள ட்ற்ற்ல்ள்://ஸ்ண்ற்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ஹஸ்ரீம்.ா்ழ்ஞ்/ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஷ்.ட்ற்ம்ப் எனும் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி விவரங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பங்களை ஏப்.30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
ஆா்வமுள்ள கல்லூரி மாணவா்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.
போட்டிக்கான விதிமுறைகள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இறுதிக் கட்ட போட்டிகள் மே 19, 20-ஆம் தேதிகளில் சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஹேக்கத்தானில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.20,000 வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.