எஸ்.சி மாணவா்களுக்கு நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 18th April 2023 02:45 AM | Last Updated : 18th April 2023 02:45 AM | அ+அ அ- |

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.சி. மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
சென்னை மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆதிதிராவிடா் இன மாணவா்களை உயா்கல்விகளில் அதிகளவில் சோ்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் உயா்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
சென்னை லயோலா கல்லூரியில் புதன்கிழமை (ஏப்.19) பகல் 2 மணிக்கு எம்எம்டி என்ற தன்னாா்வ இயக்கத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ள இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு உயா்கல்வி குறித்த பல்வேறு தகவல்கள் வழங்கப்பட உள்ளன.
எனவே, இம் மாவட்டத்தில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வரும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் அரசின் இந்த சலுகைகளை பெற்று பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.