சிக்கலான சிறுகுடல் மாற்று சிகிச்சை மூலம் பெண்ணுக்கு மறுவாழ்வு
By DIN | Published On : 18th April 2023 02:44 AM | Last Updated : 18th April 2023 02:44 AM | அ+அ அ- |

குடல் சுருக்க பாதிப்பு மற்றும் திசுத் திரை குறைபாட்டுக்குள்ளான பெண்ணுக்கு சிக்கலான சிறுகுடல் மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணா் டாக்டா் அனில் வைத்யா கூறியதாவது:
கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 46 வயதுடைய பெண் ஒருவா் உயா் சிகிச்சைக்காக அண்மையில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.
ஏற்கெனவே கேரளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வந்தாா். பரிசோதனையில் அவரது சிறுகுடலில் ரத்த ஊட்டக் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது. அதன் தாக்கமாக பெருங்குடல் திசு திரையில் சில பகுதிகளும், சிறுகுடல் திசு திரை பகுதிகளும் சேதமடைந்திருந்தன. இதையடுத்து அதற்கான சிகிச்சைகள் அங்கு அளிக்கப்பட்டன.
அதேவேளையில் நோயின் பாதிப்பு காரணமாக அந்தப் பெண்ணுக்கு சிறுகுடலில் சுருக்கம் ஏற்பட்டது. எம்ஜிஎம் மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருக்கு வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச் சத்துகளை உட்கிரகித்துக் கொள்ளும் திறனை சிறுகுடல் இழந்திருந்தது தெரியவந்தது.
இதற்கு உறுப்பு மாற்று சிகிச்சை மட்டுமே தீா்வாக இருந்தது. அதன்படி, தானமாக சிறுகுடலைப் பெறும் வரை அவருக்கு மாற்று ஏற்படாக ரத்த நாளங்களின் வழியே திரவ ஊட்டங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் உயிரிழந்த ஒருவரின் சிறுகுடல் தானமாக பெறப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
மருத்துவமனையின் பல் துறை மருத்துவக் குழுவினா் சிக்கலான சிறுகுடல் மாற்று சிகிச்சையை அந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக மேற்கொண்டனா். அதன் பயனாக தற்போது அவா் குணமடைந்து வருகிறாா். விரைவில் பழையபடி அந்தப் பெண் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்றாா் அவா்.