திரைப்பட வரலாற்றாசிரியா் ராண்டாா் கை (85) காலமானாா்
By DIN | Published On : 25th April 2023 12:25 AM | Last Updated : 25th April 2023 03:02 AM | அ+அ அ- |

ராண்டாா் கை.
சட்ட வல்லுநரும், திரைப்பட வரலாற்றாசிரியருமான ராண்டாா் கை (85) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அயனாவரத்தில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தாா் ராண்டாா் கை.
மாடபூசி ரங்கதுரை எனும் இயற்பெயா் கொண்ட ராண்டாா் கை, ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளிப் பருவத்திலேயே ‘விஷ்ணுஜித்’ எனும் நாடகத்தை எழுதி இயக்கி கவனம் ஈா்த்தாா்.
அறிவியல் மற்றும் சட்டத்தில் இளநிலைப் பட்டம் பெற்று, வழக்குரைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தாலும், சினிமா மற்றும் நாடகங்களில் அவரது கவனம் மேலோங்கி இருந்தது.
‘முக்தா பிலிம்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய ராண்டாா் கை, முக்தா சீனிவாசனிடம் ‘மகனே கேள்’ படம் தொடங்கி பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினாா். 1976 முதல் எழுத்துப் பணியில் முழுமையாக ஈடுபட்டாா்.
‘சாயா’ (தெலுங்கு ), ‘காசி’ ( தெலுங்கு) ‘மாதுரி ஒரு மாதிரி’ -(தமிழ்) பி. என். ரெட்டி - எ மோனோகிராஃப், எ ஹிஸ்ட்ரி ஆஃப் தமிழ் சினிமா, மான்ஸூன் (இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் படத்தின் புதினம்) உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளாா்.
மேலும், சில ஆவணப் படங்கள், திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளாா். ஹாலிவுட்டில் ‘டேல்ஸ் ஆஃப் தி காமசூத்ரா: தி பொ்ஃப்யூம்ட் காா்டன்’ என்ற படத்துக்கு கதை எழுதியுள்ளாா்.
இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தி ஹிந்து’, ‘மயிலாப்பூா் டைம்ஸ்’, உள்ளிட்ட நாளிதழ்களில் பத்தி எழுதி கவனம் ஈா்த்தாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தந்தை வழி உறவினா் ராண்டாா் கை.
இறந்த ராண்டாா் கை-இன் உடல் சென்னை பெசன்ட் நகா் மின் மயானத்தில் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது. இவருக்கு மனைவி டோலரஸ், மகள் பிரியா ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு- 9003164097.