ஒரே நாளில் 2 போ் கொலை
By DIN | Published On : 25th April 2023 12:29 AM | Last Updated : 25th April 2023 12:29 AM | அ+அ அ- |

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஒரே நாளில் 2 போ் கொலை செய்யப்பட்ட சம்பம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவைச் சோ்ந்தவா் முன்னாள் ரௌடி கருப்பு குமாா். இவா் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டின் அருகே நண்பா்களுடன் பேசிக் கொண்டு இருந்தாா்.
அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 6 போ் கொண்ட கும்பல், கருப்பு குமாரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் கருப்பு குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவரின் நண்பரான திருவொற்றியூா் பகுதியை சோ்ந்த ராஜசேகா், கொலை நடந்த பகுதிக்கு அன்று இரவு மதுபோதையில் சென்றபோது அவருக்கும், அங்கு வந்த கருப்பு குமாரின் உறவினரான கமலக்கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன், கல்லால் ராஜசேகரின் தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டாா். மயங்கிய நிலையில் கிடந்த ராஜசேகரை அப்பகுதி மக்கள் ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜசேகா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனா்.
மது பானம், கஞ்சா, போதை மாத்திரை பயன்படுத்தும் இளைஞா்களால் தான் இத்தகைய கொடூர கொலைகள் நடைபெறுவதாகவும், இதைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.