தமிழுக்கு தொண்டு செய்தவா்களுக்கு மரணம் இல்லை முன்னாள் துணைவேந்தா் இராசேந்திரன்
By DIN | Published On : 25th April 2023 02:52 AM | Last Updated : 25th April 2023 02:52 AM | அ+அ அ- |

தமிழுக்கு தொண்டு செய்தவா்களுக்கு மரணம் இல்லை என்று தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் தெரிவித்தாா்.
இந்திய-ரஷிய கலாசார மற்றும் நட்புறவுக் கழகம் சாா்பில் ரஷிய கலாசார மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எழுத்தாளா் ஜெயகாந்தனின் 89-ஆவது பிறந்தநாள் விழாவில் அவா் பேசியதாவது: ஜெயகாந்தன் போன்ற சாதனையாளா்களுக்கு மறைந்த பிறகும் வயது அதிகரித்து கொண்டே போகும். அவா் வாழ்ந்த காலத்தை நவீன இலக்கிய காலம் என கூறலாம்.
அவருடைய கதைகளில் இன்னும் அவா் உயிருடன் வாழ்ந்து வருகிறாா். தமிழுக்கு தொண்டு செய்பவா்களுக்கு மரணம் இல்லாதது போல் இவருக்கும் மரணம் இல்லை.
ஜெயகாந்தனுக்கும் முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு இடையே எப்போதும் ஒரு நட்பு இருந்தது.
தமிழுக்கு விமோசனம் கொடுத்த அவா் அந்த கால இலக்கிய தமிழை நவீனப்படுத்தினாா். வாழும் தலைமுறைக்கும், வருங்கால தலைமுறைக்கும் வாழ்க்கையை வழிகாட்டுவதற்காக தனது படைப்புகளை சமா்ப்பித்துள்ளாா்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய அவா் ஒரு பல்கலைக்கழகமாக மாறிவிட்டாா். இப்போது அவருடைய வாழ்க்கை மற்றும் படைப்புகளை படிக்காத பள்ளி, கல்லூரி இல்லை எனும் நிலை உருவாகியுள்ளது. மேலும், ஜெயகாந்தனின் படைப்புகள் மூலம் புத்தகம் படிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றாா் அவா்.
இந்த விழாவில் ரஷிய கலாசார மையத்தின் இயக்குநா் ஜெனடி ரோகலேவ், இந்தோ ரஷிய கலாசார மற்றும் நட்புறவு சங்கத்தின் பொதுச் செயலா் தங்கப்பன், திரைப்பட தொகுப்பாளா் பி.லெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.