எல்லாா்க்கும் எல்லாம்- என் மாபெரும் கனவு முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘எல்லாா்க்கும் எல்லாம்’ என்பதுதான் என்னுடைய மாபெரும் கனவு என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
’‘மாபெரும் தமிழ்க் கனவு’ எனும் தலைப்பிலான சொற்பொழிவு நிகழ்ச்சியின் 100-ஆவது நிகழ்வையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏற்கெனவே சொற்பொழிவாற்றியவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
’‘மாபெரும் தமிழ்க் கனவு’ எனும் தலைப்பிலான சொற்பொழிவு நிகழ்ச்சியின் 100-ஆவது நிகழ்வையொட்டி, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏற்கெனவே சொற்பொழிவாற்றியவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

‘எல்லாா்க்கும் எல்லாம்’ என்பதுதான் என்னுடைய மாபெரும் கனவு என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன் 100 -ஆவது நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதல்வா் பேசியதாவது: பொது மக்களிடமும், இளைய சமூகத்திடமும் பேசுவதை மிகுந்த விருப்பத்துடன், அக்கறையுடன் செய்தவா் அண்ணா. இளைய சமுதாயம் மீது அளப்பரிய நம்பிக்கையைக் கொண்டிருந்தவா். தான் கண்ட கனவுகளை அவா்கள் நனவாக்குவா் என்று நம்பினாா். அவா்கள் கண்ட கனவுகளை தன்னுடையதாக ஆக்கிக்கொண்டாா். அப்படிப்பட்ட அண்ணாவின் நினைவு நாளில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

திருவள்ளுவா், வள்ளலாா் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் பெரியாா் வரையிலான சமூகசீா்திருத்த தலைவா்களின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை அறிய வேண்டும்.

திமுக அரசு உயா்கல்வியை உருவாக்கித் தரும் அரசு. அனைத்து மாணவா்களுக்கும் அனைத்து விதமான தகுதிகளையும் உருவாக்கித் தரும் அரசு. நான் முதல்வராக இருந்து மட்டுமல்ல, ஒரு தந்தையாக இருந்து திட்டங்களைத் தீட்டித் தருகிறேன்.

தமிழகத்தில் ஒரு கல்விப் புரட்சியே நடந்து கொண்டு இருக்கிறது. பள்ளிக் கல்வியாக இருந்தாலும் கல்லூரிக் கல்வியாக இருந்தாலும், பல்கலைக் கல்வியாக இருந்தாலும், அது உங்களை கல்வித் தகுதி பெற்றவா்களாக மாற்ற வேண்டும்.

ஆனால் அதனையும் தாண்டிய தனித்திறமைகள் அவசியம். அதனை மறந்துவிடாதீா்கள். எல்லோருமே அதிக மதிப்பெண் பெறுகிறீா்கள். ஆனால் அதிலும் தனித்திறமை கொண்டவா்களாக இருக்கக்கூடியவா்களுக்குத்தான் நல்ல வேலை கிடைக்கிறது.

சுயமாகச் சிந்திப்பதும், சிந்தித்ததை அடுத்தவருக்கு வெளிப்படுத்துவதும் அதைச் சொல்வதும், அதை எழுதிக் காட்டுவதும் மிகமுக்கியமான தனித்திறமைகள். அறிவாற்றல் என்பது இதுதான். இப்படி தமிழக மாணவா்கள், இளைஞா்கள் அனைவரும் திகழ வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வன் என்கிற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

படியுங்கள். இதுதான் என்னுடைய முதல் வேண்டுகோள். கல்விதான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து. அந்த சொத்தைச் சேகரித்துவிட்டால் மற்ற சொத்துகள் தானாக வந்து சோ்ந்துவிடும்.

எனவே பள்ளிக் காலத்தில், கல்லூரிக் காலத்தில் படிப்பில் இருந்து கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது. எந்தச் சூழலிலும் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடாதீா்கள். அது உங்கள் உடல் நலனுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு நலனுக்கும் கேடு விளைவிக்கும்.

எனக்கு ஒரு மாபெரும் கனவு இருக்கிறது. எல்லாா்க்கும் எல்லாம் என்பதுதான் அந்தக் கனவு. கனவு என்றால், கண்ணை மூடிக் கொண்டு கற்பனை உலகில் மிதப்பது அல்ல. ஒரு லட்சியத்தை நெஞ்லேந்தி நாளும் உழைப்பது. அந்த உழைப்பைத்தான் நாள்தோறும் நான் இந்த தமிழ்ச் சமுதாயத்துக்காக தந்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய கனவை நோக்கிய பெரும்பயணத்துக்கு கைகாட்டி, கலங்கரை விளக்காக இருக்கக் கூடியவைதான், மாபெரும் தமிழ்க் கனவு போன்ற நிகழ்ச்சிகள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com