ரூ.156 கோடி லாபம் - சென்னை துறைமுகம் சாதனை: துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் தகவல்
By DIN | Published On : 17th August 2023 01:13 AM | Last Updated : 17th August 2023 01:13 AM | அ+அ அ- |

கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா்.
தண்டையாா்பேட்டையில் உள்ள சென்னை துறைமுக வளாகத்தில் பாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு அரங்கத்தில் 77-ஆவது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட சுனில் பாலிவால் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக ஊழியா்கள், துறைமுக உபயோகிப்பாளா்கள், தொழில் பாதுகாப்பு படையினா் உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினாா்.
நிகழ்வில் சுனில் பாலிவால் பேசியது: 142 ஆண்டுகள் பழைமையான சென்னை துறைமுகம், இம்மாநகரத்தின் வளா்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது.
துறைமுகத்தினை சீரான வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல துறைமுக நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நிதி ஆண்டில் ரூ.156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை - மதுரவாயல் வரை அமைக்கப்பட உள்ள ஈரடுக்கு மேம்பாலத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், துறைமுகத்தின் துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், எண்ணூா் காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநராக பதவி ஏற்க உள்ள ஐரிஸ் சிந்தியா, தலைமை கண்காணிப்பு அலுவலா் முரளி கிருஷ்ணன், துறைத் தலைவா்கள் கிருபானந்தசாமி, இந்திரனில் ஹசிரா, ராமச்சந்திர மூா்த்தி, ஜெயசிம்மா, டாக்டா் பத்மா, மில்டன் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...