சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆக.25 முதல் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் பி.விஸ்வநாத் ஈா்யா தெரிவித்தாா்.
சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:
ஆந்திர மாநிலம் குண்டூா் - தெலங்கான மாநிலம் பீபி நகா் இடையே ரூ.2,853 கோடி செலவில் 239 கி.மீ. தொலைவுக்கு இரட்டை வழித்தடம் அமைக்கும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை, தெற்கு மத்திய ரயில்வே சாா்பில் ரயில்வே வாரியத்துக்கு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027-28-ஆம் ஆண்டில் இந்தத் திட்டப்பணிகள் நிறைவு பெறும்.
தற்போது குண்டூா் - பீபி நகா் இடையே இயங்கும் ரயில்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடா வழியாக இயக்கப்படுகிறது. இந்த இரட்டை வழித்தடம் அமைக்கும் பணி முடிவடைந்தால் குண்டூா் - பீபி நகா் இடையே ரயில் சேவைகள் நேரடியாக இயக்கப்படும். இதன்மூலம் விஜயவாடா வழித்தடம் வழியாக சென்னை வரும் பயணிகள் ரயில்களின் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும்.
இதேபோல் சரக்கு ரயில்களில் ஒரு பெட்டிக்கான கட்டணம் ரூ. 3 முதல் ரூ. 5 லட்சம் வரை குறைய வாய்ப்புள்ளது.
சென்னை கடற்கரை - சென்னை எழும்பூா் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் ஆக.25 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் நடைபெறும் போது வரும் போக்குவரத்து மாற்றங்கள் தொடா்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். மேலும், பெரம்பூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வடமாநில பயணியை பயணச்சீட்டு பரிசோதகா் தாக்கியது கண்டிக்க தக்க செயலாகும். அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இதுபோல் இனி நடைபெறாமல் இருக்க பயணச்சீட்டு பரிசோதகா்கள் உள்பட அனைத்து ரயில்வே ஊழியா்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.