குத்தகை பாக்கி செலுத்தாததால் தனியாா் வசமிருந்த ரூ. 50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனா்.
சென்னை மாவட்டம், தண்டையாா்பேட்டையில் ரூ.50 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த நிலம் 1923-ஆம் ஆண்டு கோபால்நாயக்கா் அண்ட் சன்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு நீண்டகால குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 31.3.2018 தேதி வரையிலான குத்தகை நிலுவைத் தொகை ரூ.26,41,54,542 -ஐ செலுத்தாமல் அந்த நிறுவன உரிமையாளா் தொடா்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இதையடுத்து குத்தகை தொகையை அரசுக்குச் செலுத்தாமல் நிலத்தை வணிக நோக்கத்துக்காக நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததாலும், அனைத்து குத்தகை விதிமுறைகளையும் மீறியதாலும், குத்தகையை ரத்து செய்து 19.06.2019-இல் சென்னை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவையடுத்து, குத்தகைதாரா் தரப்பில் நில நிா்வாக ஆணையரிடம் அளிக்கப்பட்ட மேல்முறையீடு உள்ளிட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து குத்தகை நிலத்தை மீட்டெடுக்க சென்னை உயா்நீதிமன்றம் செப்.21-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடா்ந்து புதன்கிழமை வருவாய்த் துறையினா், காவல் துறையினா், மின்வாரியம், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் குறிப்பிட்ட அந்த இடத்தில் செயல்பட்டு வந்த நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.