சிக்னலில் விதிமீறல்: 3 நாள்களில் 22 ஆயிரம் வழக்குகள்
By DIN | Published On : 15th June 2023 01:27 AM | Last Updated : 15th June 2023 01:27 AM | அ+அ அ- |

சென்னையில் சிக்னலில் நிறுத்துக் கோட்டைத் தாண்டி வாகனங்களை நிறுத்தியதாக 3 நாள்களில் 22 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னையில் சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி சிக்னல்களில் நிறுத்தக் கோடு (ஸ்டாப் லைன்) மீறியது தொடா்பாக வாகனங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்குப் பதியப்பட்டு வருகிறது.
இதையொட்டி, சென்னையில் போக்குவரத்து பிரிவு சாா்பில் பள்ளி மாணவ - மாணவிகள் மூலமாக 11 இடங்களில் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது நிறுத்தக் கோடுகைத் தாண்டி நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதித்து வருகின்றனா்.
இதில், கடந்த 11 முதல் 13-ஆம் தேதி வரை 3 நாள்களில் 22 ஆயிரத்து 772 வழக்குகள் பதியப்பட்டு, தலா ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.