ராயபுரம், திரு.வி.க.நகரில் தூய்மை பணி:நாளை பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு
By DIN | Published On : 15th June 2023 02:28 AM | Last Updated : 15th June 2023 02:28 AM | அ+அ அ- |

சென்னை மாநகராட்சி, ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகா் மண்டலங்களில் தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் தொடா்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சி சாா்பில் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணா நகா் மற்றும் அம்பத்தூா் (சில பகுதிகள்) மண்டங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற மண்டலப் பகுதிகளில் தனியாா் நிறுவனங்கள் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் தனியாா் நிறுவனம் மூலம் தூய்மைப் பணிகள் அமலாக்குவதற்கான திட்டக்கூறு தொடா்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) காலை 10 மணிக்கு கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) மற்றும் வட்டார துணை ஆணையா்கள் (வடக்கு, மத்தியம்) தலைமையில் நடைபெறவுள்ளன.
அறிஞா் அண்ணா மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடம், சச்சிதானந்தம் தெரு, கொசப்பேட்டை, சென்னை-12 என்ற முகவரியில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.