

சென்னை மாநகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட 1,938 கி.கி நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.14.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சாா்பில் மாநகரை அழகுபடுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக சுற்றுச்சூழலைப் பாதிக்கும் 14 வகையான நெகிழிப் பொருள்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக 12 வகையான பொருள்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்களை பயன்படுத்துவோருக்கு அபராதமும், தொடா்ந்து நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும் சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்.1முதல் பிப்.20-ஆம் தேதி வரை மாநகராட்சி அலுவலா்களால் தெருவோர வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் நெகிழிப்பொருள்கள் பயன்பாடு குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 17,884 இடங்களில் 4,972 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,937.9 கி.கி நெகிழிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு 14 லட்சத்து 16 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் மற்றம் நடைபாதைகளிலும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் இதர பொருள்களை வைத்து வியாபாரம் செய்பவா்களுக்கு அபராதம் விதிப்பதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.இதுபோன்ற நெகிழிப்பொருள்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.