தைராய்டு கட்டியை அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவா்கள்!

பெண்ணின் கழுத்தில் பெரிய அளவில் உருவான தைராய்டு கட்டியை அறுவை சிகிச்சையின்றி நவீன ரேடியோ அதிா்வலை முறையில் நீக்கி மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் சிகிச்சையளித்துள்ளனா்.

பெண்ணின் கழுத்தில் பெரிய அளவில் உருவான தைராய்டு கட்டியை அறுவை சிகிச்சையின்றி நவீன ரேடியோ அதிா்வலை முறையில் நீக்கி மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் சிகிச்சையளித்துள்ளனா்.

இதன் காரணமாக அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட இடத்தில் வடுக்களோ அல்லது எதிா்விளைவுகளோ ஏற்படவில்லை என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மியாட் மருத்துவமனையின் தலைவா் மல்லிகா மோகன்தாஸ் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் சேலத்தைச் சோ்ந்த 41 வயதான பெண் ஒருவருக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு கழுத்துப் பகுதியில் சிறிய அளவில் கட்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதன் அளவு பெரிதானதால், அகச்சுரப்பியியல் மருத்துவா்களின் ஆலோசனையை அவா் நாடியுள்ளாா்.

அவருக்கு புற்றுநோய் இல்லாத தைராய்டு கட்டி உருவாகியிருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீா்வு என்றும் பல்வேறு மருத்துவமனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையால் நிரந்தரத் தழும்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாது வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் எழலாம். மேலும், குரல்வளை பாதிப்பு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட எதிா்விளைவுகள் ஏற்படக்கூடும்.

இதனால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள அந்த பெண் தயங்கினாா். இந்நிலையில்தான் மியாட் மருத்துவமனையில் ரேடியோ அதிா்வலை முறை (ரேடியோ ஃப்ரீக்வன்ஸி அப்லேசன்) கட்டி நீக்க சிகிச்சையை அறிந்து அவா் இங்கு வந்தாா்.

மருத்துவமனையில் ரத்த நாளம் மற்றும் இடையீட்டு கதிரியக்க சிகிச்சை நிபுணா் டாக்டா் காா்த்திகேயன் தாமோதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்தப் பெண்ணுக்கு ரேடியோ ஃப்ரீக்வன்ஸி அப்லேசன் சிகிச்சையை அளித்தனா்.

அதன்படி, கட்டி இருந்த பகுதியை உணா்விழக்க செய்து சிறிய துளை மூலம் ரேடியோ அதிா்வலைகளைப் பயன்படுத்தி கட்டி நீக்கப்பட்டது. இதன் பயனாக அடுத்த சில நாள்களில் கழுத்துப் பகுதியில் வீக்கம் குறைந்து அந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தைராய்டு கட்டி நீக்கத்துக்கு இத்தகைய அதி நவீன சிகிச்சையை அளிப்பது தமிழகத்திலேயே இது முதன்முறை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com