சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கம் மெட்ரோ சுரங்கப் பணி:ஜூலையில் தொடக்கம்
By DIN | Published On : 22nd May 2023 01:29 AM | Last Updated : 22nd May 2023 01:29 AM | அ+அ அ- |

சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி ஜூலையில் தொடங்குகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
மாதவரம் பால் பண்ணை -சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூா் ஆகிய தடங்களில் 118 கி.மீட்டா் தொலைவுக்கு இந்த பணிகள் நடைபெற உள்ளன.
இதையடுத்து மெட்ரோ ரயில் பாதைகளில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகம் எடுத்துள்ளது.
மாதவரம் மற்றும் பசுமை வழித்தடத்தில் சுரங்கப் பணிகள் ஜூலையில் தொடங்கும். ஸ்டொ்லிங் சாலை சந்திப்பின் கீழ் 850 மீ நீளத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமையவுள்ளது. இது மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் சிறிய பகுதி ஆகும்.
இதற்காக சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஜூலை முதல் சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை பணி துளையிடும் இயந்திரம் மூலம் 22 மீ ஆழத்தில் தொடங்கப்படும். இது ஸ்டொ்லிங் சாலை சந்திப்பை நோக்கிச் செல்லும் போது ஆழம் 15 மீட்டராக குறையும். ஏற்கனவே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.