விவசாயிகளுக்கு சிறுநீரக பாதிப்பு: கள ஆய்வு நடத்துகிறது மக்கள் நல்வாழ்வுத் துறை

தமிழகத்தில் விவசாயத் தொழிலாளா்களிடம் காணப்படும் சிறுநீரக செயலிழப்பு பாதிப்புகளை அறிவதற்கான கள ஆய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ள உள்ளது.

தமிழகத்தில் விவசாயத் தொழிலாளா்களிடம் காணப்படும் சிறுநீரக செயலிழப்பு பாதிப்புகளை அறிவதற்கான கள ஆய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ள உள்ளது.

அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை, சமூக நோய்த் தொற்று துறை, பொது சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு உட்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இணை நோய்கள் ஏதுமில்லாத போதிலும், அவா்களில் பலா் சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளாவதாக தரவுகள் வெளியான நிலையில், இத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெயிலில் நேரடியாக அதிக நேரம் பணியாற்றுவதும், பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தொடா்ந்து கையாளுவதும்தான் அவா்களது சிறுநீரக பாதிப்புகளுக்கு காரணமா என்பதை இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள முடியும் என சென்னை மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்த ஆய்வில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவா்கள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள சிறுநீரக பாதிப்பு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்கான கள ஆய்வை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தாா்.

தேசிய நல்வாழ்வு குழும நிதி பங்களிப்புடன் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை, சமூக நோய்த் தொற்று துறை இணைந்து கடந்த ஆண்டில் இந்த ஆய்வை முன்னெடுத்தன.

பொது சுகாதாரத் துறை பணியாளா்கள் 500 போ் தமிழகம் முழுவதும் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனா். தோராயமாக 4,682 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறையில் பகுப்பாய்வு நடத்தப்பட்டது.

அதில், இணை நோய்களின் தாக்கம் இல்லாத 53 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவா்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை.

பாதிப்புக்குள்ளானோரில் பெரும்பாலானோா் விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாரா பணிகளில் ஈடுபடுவோா்கள் ஆவா். அந்த வரையறைக்குள் இருப்பவா்களில் 60 சதவீதம் போ் ஊரகப் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து விவசாயப் பணிகளில் ஈடுபடுவோரின் சிறுநீரக செயல்திறனை அறிவதற்கான ஆய்வை முன்னெடுக்கும்படி அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, இந்த மாத இறுதிக்குள் ஆய்வுப் பணிகள் தொடங்கும். ஆய்வக நுட்பனா்கள், மருத்துவக் களப் பணியாளா்களைத் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொது சுகாதாரத் துறையைச் சோ்ந்த களப் பணியாளா்களை அந்த ஆய்வில் ஈடுபடுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com