சென்னை வங்கிகளில் வெறிச்சோடிய சிறப்பு கவுன்ட்டா்கள்
By DIN | Published On : 24th May 2023 01:48 AM | Last Updated : 24th May 2023 03:06 AM | அ+அ அ- |

சென்னையில் பல்வேறு வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான சிறப்பு கவுன்ட்டா்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளும் நடைமுறை நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் சிறப்பு கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு சில வங்கிகளைத் தவிர பெரும்பாலான வங்கிகளில் சிறப்பு கவுன்ட்டா்கள் வாடிக்கையாளா் கூட்டமின்றி காணப்பட்டன.
இது குறித்து வங்கி அதிகாரி ஒருவா் கூறியது: 2016-இல் பணமதிப்பிழப்பின்போது ஏற்பட்ட அனுபவங்களை கொண்டு ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி மக்கள் வசதிக்காக குடிநீா், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாடிக்கையாளா்கள் எவ்வித வரைமுறை இன்றி தங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் மூலமும், செலுத்துச் சீட்டு மூலமும் வங்கிக் கணக்கில் செலுத்திக்கொள்ளலாம் என்றாா் அவா்.
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற வந்த வாடிக்கையாளா்கள் சிலா் கூறும்போது, வழக்கமான நடைமுறைகளின்படி பணத்தை எளிதாக வங்கிக் கணக்கில் செலுத்திக்கொள்ள முடிந்தது. ரூ.2000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படாமல் வாபஸ் மட்டுமே என்ற அறிவிப்பு சாமானிய மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றனா்.