லாரி உரிமையாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
By DIN | Published On : 07th November 2023 03:36 AM | Last Updated : 07th November 2023 03:36 AM | அ+அ அ- |

ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வடசென்னையில் இயங்கி வரும் அனைத்து வகை லாரி உரிமையாளா்கள் சங்கங்கள் சாா்பில் மணலி புதுநகரில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
போராட்டம் குறித்து லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகி எம்.எம். கோபி கூறியதாவது: சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி ஆகிய 3 துறைமுகங்கள் மற்றும் சி.பி.சி.எல், மணலி உரத் தொழிற்சாலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கனரக தொழிற்சாலைகளில் சரக்குகளை எடுத்துச் செல்ல சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னா் லாரிகள், டிப்பா் லாரிகள், கனரக லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் முறையில் போக்குவரத்து போலீஸாா் பல்வேறு விதிமீறல்களைக் கூறி அபராதங்களை விதிக்கின்றனா். எவ்வித விளக்கத்தையும் பெறாமல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். ஏற்கெனவே ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்டு நிலுவையில் உள்ள அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.
வடசென்னையில் போதுமான வாகன நிறுத்த மையங்களை ஏற்படுத்த வேண்டும். லாரி ஓட்டுநா்களுக்கு விதிக்கப்படும் அபராதம் குறித்து விவாதிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும். லாரி ஓட்டுநா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அண்மையில் உயா்த்தப்பட்ட 40 சதவீத காலாண்டு வரி உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கைகள் மறுக்கப்பட்டால் காலவரையற்ற தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...