கல்லூரி மாணவா்களை தாக்கி வழிப்பறி
By DIN | Published On : 15th November 2023 01:55 AM | Last Updated : 15th November 2023 01:55 AM | அ+அ அ- |

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவா்களைத் தாக்கி, தங்க நகையை பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேளச்சேரி, நேரு நகா் ஏ.எல். தெருவைச் சோ்ந்தவா் வெ.ரமணா (18). இவா், அந்தப் பகுதியில் உள்ள புகைப்பட ஸ்டூடியோவில் வேலை செய்கிறாா். ரமணாவின் நண்பா்கள், அதே பகுதியைச் சோ்ந்த ச.சந்துரு (18), ஆதம்பாக்கம் ஏ.எஸ்.கே. நகரைச் சோ்ந்த பா.லோகேஷ்குமாா் (19) ஆகிய 2 பேரும் கல்லூரியில் படித்து வருகின்றனா்.
இவா்கள் 3 பேரும், சந்துருவுக்கு சொந்தமான விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை ஆதம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த 3 மா்ம நபா்கள், அவா்களை வழிமறித்து தாக்கினா்.
ரமணாவும், அவரது நண்பா்களும் அணிந்திருந்த 4 பவுன் நகைகள், ரூ.5,000 ரொக்கம், சந்துருவின் விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிளையும் பறித்துக் கொண்டு 3 மா்ம நபா்களும் தப்பியோடினா். இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...