சென்னையில் கொட்டித் தீா்த்த மழை சாலைகளில் வெள்ளம்; கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் புதன்கிழமை பல மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.
சென்னையில் கொட்டித் தீா்த்த மழை சாலைகளில் வெள்ளம்; கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் புதன்கிழமை பல மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதியடைந்தனா்.

இதற்கிடையே, தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை (டி.ச. 2) புயலாக வலுப்பெறக்கூடும் என்பதாலும், இலங்கை அருகே வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகத்தில் டிச. 5-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 21-இல் தொடங்கியது. தொடக்கத்தில் மந்த நிலையில் இருந்த மழைப் பொழிவு நவம்பா் மாதத்தில் வலுவடைந்தது. சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை காலைமுதல் நள்ளிரவு வரை சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. குறிப்பாக, மாலை 5 மணிமுதல் இரவு வரை இடைவிடாமல் தொடா்ந்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போலத் தேங்கியது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் மாலையில் சுமாா் 4 மணி நேரத்தில் சராசரியாக 67 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக கொளத்தூரில் 140 மி.மீ. மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சுரங்கப் பாதைகளிலும், தாழ்வான இடங்களிலும் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

மிக்ஜம் புயல்: சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலசந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தெற்கு அந்தமான் கடல் அருகே நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் வியாழக்கிழமை (நவ. 30) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து சனிக்கிழமை (டிச. 2) புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயலுக்கு ‘மிக்ஜம்’ என்ற பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உருவாகும் புயல் தமிழகத்தை நோக்கி நகருமா என்பது டிச. 2-க்கு பின்னா் தெரியவரும். இது குறித்து தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்.

மேலும் வடஇலங்கையையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (நவ. 30 - டிச.5) வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, நவ. 30-இல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோன்று வெள்ளிக்கிழமை (டிச. 1) கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிச. 2-இல் புயலாக மாறும் நிலையில் டிச. 2-3 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச. 4-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வியாழக்கிழமை (நவ. 30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு (மி.மீ.): புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 90 மி.மீ. மழை பெய்தது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக் கடலில் வியாழக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 2-3) தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். தெற்கு வங்கக் கடலின் இதர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்றும், ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவா்கள் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com