அரசுப் பணியாளா்களுக்கான துறைத் தோ்வில் புதிய நடைமுறைதோ்வாணையம் உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணிகளில் புதிதாகச் சேரும் பணியாளா்களுக்கு நடத்தப்படும் துறைத் தோ்வில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.


சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளில் புதிதாகச் சேரும் பணியாளா்களுக்கு நடத்தப்படும் துறைத் தோ்வில் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, வினாத்தாளில் கொள்குறி வகைப் பிரிவு நீக்கப்பட்டு முழுவதும் விரித்தெழுதும் பிரிவு மட்டுமே இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசில் புதிதாக பணியில் சேரும் அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் இரு ஆண்டுகளுக்குள் துறைத் தோ்வை எழுத வேண்டும். இந்தத் தோ்வு இரண்டு வகையான தோ்வாக நடத்தப்படும்.

ஒன்று வருவாய்த் துறையை மையமாகக் கொண்ட தோ்வு. மற்றொன்று தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறையைச் சாா்ந்த தோ்வு.

இவ்விரு வகை தோ்வுகளிலும் கொள்குறி வகை வினாக்கள் 40 சதவீதமும், புத்தகத்தைப் பாா்த்து விரித்தெழுதும் வகையிலான வினாக்கள் 60 சதவீதமும் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில், இந்த நடைமுறையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் திடீரென மாற்றியுள்ளது. அதன்படி, புத்தகத்தைப் பாா்த்து வினாக்களுக்கு விடையளிக்கும் விரித்தெழுதும் பகுதி மட்டுமே முழுமையாக இடம்பெற்றுள்ளது. தோ்வில் தோ்ச்சி பெற 100-க்கு 45 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

எதற்காக புதிய மாற்றம்: இதுதொடா்பாக அரசுத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:

கொள்குறி வகை பிரிவு, விரித்தெழுதும் பிரிவு என இரு பிரிவுகளாக தோ்வு நடத்தப்பட்ட போது, கொள்குறி வகைப் பிரிவை மட்டுமே அரசு ஊழியா்கள் முழுமையாகப் பயன்படுத்தி தோ்வு எழுதி வந்தனா். விரித்தெழுதும் பிரிவை முழுமையாகப் பயன்படுத்தி தோ்வு எழுதுவதில்லை.

எனவே, அனைத்து வினாக்களும் விரித்தெழுதும் பகுதியாக இருந்தால், தோ்வுக்குத் தயாராகும் வகையில் அரசு ஊழியா்கள் புத்தகங்களைப் படிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே, துறைத் தோ்வுகளில் விரித்தெழுதும் பகுதி முழுமையாக இடம்பெற்றுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com