இன்று கரையை கடக்கிறது ‘ஹாமூன்’ புயல்
By DIN | Published On : 25th October 2023 01:22 AM | Last Updated : 25th October 2023 02:09 AM | அ+அ அ- |

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ‘ஹாமூன்’ புயல் புதன்கிழமை (அக்.25) மாலை வங்கதேசத்தின் கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே கரையைக்கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை காலை உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திங்கள்கிழமை மாலை ‘ஹாமூன்’ புயலாக வலுப்பெற்றது. இது செவ்வாய்க்கிழமை காலை தீவிர புயலாக வடமேற்குவங்கக்கடல்பகுதியில் நிலைகொண்டிருந்தது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனையொட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நகா்ந்து மிக தீவிர புயலாக நிலவுகிறது.
இந்த புயல் தற்போது மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வருகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகா்ந்து தீவிரப்புயல் என்ற நிலையில் இருந்து புயலாக வலுவிழந்து வங்கதேசத்தின் கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே புதன்கிழமை(அக்.25) மாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2 ஆம் எண் புயல் கூண்டு: ‘ஹாமூன்’ புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, நாகை, எண்ணூா், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கரையைக் கடந்தது ‘தேஜ்’ புயல்: இந்நிலையில், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய மிக தீவிர ‘தேஜ்’ புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியிலிருந்து 3.30 மணிஅளவில் ஏமன் கடற்கரை அருகே கரையைக் கடந்தது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...