

ஆவடி: ஆவடி ரயில் நிலையம் அருகில் மின்சார ரயில் தடம் புரண்டது. இதனால், பல மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் 4 இருப்புப் பாதைகள் உள்ளன. இவற்றில் இரண்டு பாதைகளில் விரைவு ரயில்களும், மற்ற இரண்டு பாதைகளில் மின்சார ரயில்களும் சென்று வருகின்றன. இந்த மார்க்கத்தில் ஆவடி, பட்டாபிராம் சைடிங், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சுமார் 125 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இந்த மார்க்கத்தில் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 25 சரக்கு ரயில்களும் சென்று வருகின்றன.
இந்த மார்க்கத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அரசு, தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் தினமும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஆவடி அருகே அண்ணனூர் ரயில்வே பணிமனையில் இருந்து 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில், சென்னை கடற்கரைக்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஆவடி ரயில் நிலையத்தின் 3-ஆவது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயிலை ஓட்டுநர் ரவி (56) என்பவர் இயக்கி வந்துள்ளார்.
இந்த ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்காமல், அங்கிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு சென்று தடம் புரண்டது. இதில் முன் பகுதியில் இருந்த 4 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு, 2-ஆவது இருப்புப் பாதையில் சாய்ந்தன.
இதில் என்ஜின் சென்ற ரயில் பெட்டி மின்கம்பத்தில் மோதி நின்றது. இதையடுத்து, சென்னை- அரக்கோணம் மார்க்கத்தின் இருபுறமும் செல்லும் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தகவல் அறிந்து சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் இ.பி.விஸ்வநாத் தலைமையில் ரயில்வே பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது விபத்தினால் இருப்புப் பாதை பகுதிகள், மின் கம்பம், வயர்கள் சேதமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, தடம் புரண்ட மின்சார ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சென்னை- அரக்கோணம் மார்க்கமாகச் செல்லும் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் அதிகாலை 5.40 மணி முதல் 8.40 வரை ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
குறிப்பாக சென்னை- மைசூர் செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், சென்னை - கோயமுத்தூர் செல்லும் விரைவு ரயில் ஆகியவை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சப்தகிரி, பிருந்தாவன், டபுள் டக்கர் ஆகிய விரைவு ரயில்கள் கால நேரம் அமைக்கப்பட்டு சென்றன.
இதன்பிறகு, 3 மணி நேரத்துக்குப் பின்னர், ஆவடி ரயில் நிலையத்தில் மாற்றுப் பாதையில் மின்சார ரயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டன. விரைவு ரயில்கள் 4-ஆவது இருப்புப்பாதை வழியாக எவ்வித பாதிப்பும் இன்றி இயக்கப்பட்டன.
இது குறித்து அண்ணனூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடம் புரண்ட ரயிலானது பணிமனையில் இருந்து வந்த நிலையில், அதில் பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து ரயில்வே கோட்ட துணை மேலாளர் கவுசல் கிஷோர் கூறியது: ரயில் தடம் புரண்டதற்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணமாகும் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில் தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டு, அண்ணனூர் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர், இருப்புப் பாதைகளில் சில சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இரவு 7.30 மணியளவில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, ரயில் சேவை தொடங்கியது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.