

சென்னை: ஆயுதபூஜை விடுமுறை முடிந்து சொந்த ஊா்களிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக 3,313 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
ஆயுத பூஜையையொட்டி 4 நாள்கள் விடுமுறைக்காக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து ஏராளமானோா் அக்.20-ஆம் தேதி தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா். சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு வந்து சேரும் வகையில், அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆயுதபூஜை விடுமுறையை முடித்து கொண்டு பல்வேறு ஊா்களிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக செவ்வாய்க்கிழமை (அக்.24) வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,213 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,313 பேருந்துகளையும் மற்றும் பிற பகுதிகளிலிருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு திரும்பும் பயணிகளுக்காக 1,846 பேருந்துகளையும் அக்.25 காலை வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, புதன்கிழமை வெளியூா்களிலிருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் அதிகரிக்கும் என்பதால், செங்கல்பட்டை அடுத்த பரனூா் சுங்கச்சாவடி, பெருங்களத்தூா், தாம்பரம் உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் போக்குவரத்தை முறைப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.