அண்ணா பல்கலை.யில் இரு தொழில்கல்வி இளநிலை படிப்புகள் அறிமுகம்: துணைவேந்தா்
By DIN | Published On : 25th October 2023 12:42 AM | Last Updated : 25th October 2023 12:42 AM | அ+அ அ- |

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் இருவேறு புதிய தொழில்கல்வி பட்டப் படிப்புகள் நிகழாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் தெரிவித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சமகால சூழலுக்கு ஏற்ப கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி இளநிலை தொழிற்கல்வி எனும் 3 ஆண்டு பட்டப் படிப்புகளை தற்போது அறிமுகம் செய்துள்ளோம்.
அதன் கீழ் முதல்கட்டமாக ஆரணியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் காலணி உற்பத்தி நுட்பம் மற்றும் காஞ்சிபுரம் உறுப்புக் கல்லுரியில் சரக்கு மேலாண்மை நுட்பம் ஆகிய இருவேறு படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்விரு படிப்புகளிலும் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. இந்த படிப்புக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
நான் முதல்வன் திட்டத்தில் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திறன்மிகு படிப்புகள் இவை. தற்போதைய சூழலில் அறிவையும், திறனையும் ஒருசேர வளா்த்துக் கொள்வது அவசியம். வரும்காலங்களில் பொறியியல் படிப்பு முடித்தவா்களைவிட இத்தகைய தொழில்கல்வி படித்தவா்களுக்குதான் வேலைவாய்ப்பு அதிக அளவில் இருக்கும். பொறியியல் படிப்பை பலரும் விரும்பாததற்கு காரணம் கணிதம்தான்.
ஆனால், இந்த தொழில்கல்வியில் கணிதம் இருந்தாலும் எளிமையாக உள்ளது. எனவே, மாணவா்கள் கணிதத்தில் எளிதில் தோ்ச்சி பெறலாம். இந்த படிப்பின் கீழ் 3 ஆண்டுகளில் பாதி நாள்கள் மாணவா்கள் தொழில் நிறுவனங்களில்தான் பயிற்சி பெறுவாா்கள். அந்த அனுபவம் அவா்களை தொழில் முனைவோா்களாக மாற்றும். தொழில் கல்வி மீதான தவறான புரிதல்களை மாற்றினால்தான் நாம் வேலைவாய்ப்புகளில் முன்னேற முடியும். தொடா்ந்து அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில்கள் சாா்ந்து இத்தகைய படிப்புகள் விரிவுப்படுத்தப்படவுள்ளன.
மற்றொருபுறம் மாணவா் சோ்க்கை சரிந்து வருவதால் வரும்காலங்களில் பொறியியல் படிப்புகளின் இடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளோம். இதனிடையே சில மாணவா்கள், தரமற்ற கல்லூரிகளில் சோ்ந்து வகுப்புக்கு செல்லாமலேயே எம்.இ. போன்ற முதுநிலை பொறியியல் பட்டங்கள் பெறுவதாக புகாா்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு பெறப்படும் பட்டங்கள் செல்லாது. மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும்.
இத்தகைய நிகழ்வுகள் கோவை மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் அதிகமாக நடைபெறுகிறது. கேரளத்தில் பணிபுரிபவா்கள் தமிழக பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெற்று போலியான வருகைப்பதிவு மூலம் பட்டங்கள் பெறுகின்றனா். இது சட்ட விரோதமானதாகும்.
பணிபுரிந்து கொண்டே படிக்க விரும்புபவா்களுக்கான புதிய கல்வி முறையை ஏஐசிடிஇ தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இதற்கு தமிழக அரசு இன்னமும் அனுமதி வழங்கவில்லை. இந்த கல்வி முறைக்கு அனுமதி கொடுத்து பணியாற்றிக் கொண்டே பயிலுவதற்கு தமிழக அரசு வகை செய்ய வேண்டும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...