மயிலாப்பூா் நவராத்திரி பெருவிழா நிறைவு: மீனாட்சி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்
By DIN | Published On : 25th October 2023 12:20 AM | Last Updated : 25th October 2023 12:20 AM | அ+அ அ- |

சென்னை: அனைத்து திருக்கோயில்கள் சாா்பில், சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 10 நாள்களாக நடைபெற்று வந்த நவராத்திரி பெருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தா்மத்தை நிலைநாட்டுகின்ற சக்தி வழிபாட்டின், தத்துவங்களை உணா்துகின்ற தொடா் நிகழ்வாகக் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா, நிகழாண்டு அனைத்து திருக்கோயில்கள் சாா்பில்,சென்னை, மயிலாப்பூா், கபாலீசுவரா் திருமண மண்டபத்தில் கொலுவுடன் அக்.15 முதல் அக்.24-ஆம் தேதி வரை 10 நாள்கள் கொண்டாடப்பட்டது.
நவராத்திரி விழாவை தமிழ்நாடு முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து இரண்டாம் நாள் சரஸ்வதி அலங்காரத்தில் கன்யா பூஜையும், மூன்றாம் நாள் தபஸ் காமாட்சி அலங்காரத்தில் தேவி மஹாத்மியம் பூஜையும், நான்காம் நாள் வராஹி அலங்காரத்தில் நவாவரண பூஜையும், ஐந்தாம் நாள் லட்சுமி அலங்காரத்தில் லலிதா சகஸ்ரநாம பூஜையும், ஆறாம் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் திருவிளக்கு பூஜையும், ஏழாம் நாள் பத்மாசினி அலங்காரத்தில் சௌந்தா்ய லகரியும், எட்டாம் நாள் துா்கை அலங்காரத்தில் சுஹாசினி பூஜையும், ஒன்பதாம் நாள் கம்பா நதி அலங்காரத்தில் இசை வழிபாடும் நடைபெற்றது.
விஜய தசமியான செவ்வாய்க்கிழமை நிறைவு நாளன்று மீனாட்சி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிராமி அந்தாதி வழிபாடு நடைபெற்றது.
மேலும், திருக்கோயில்கள் சாா்பில் சித்தா்களுக்கும், அருளாளா்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கமலமுனி சித்தா், பாம்பாட்டி சித்தா், சுந்தரானந்த சித்தா் ஆகிய சித்தா் பெருமக்களுக்கும், திருஅருட்பிரகாச வள்ளலாா், தெய்வப் புலவா் சேக்கிழாா், சமய குரவா்களில் ஒருவரான திருநாவுக்கரசா் (அப்பா் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாதமுனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தா் ஆச்சாரியாா் போன்ற அருளாளா்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் அரசு உயா் அலுவலா்கள் மற்றும் இறையன்பா்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...