கட்டடத் தொழிலாளியின் தொடையில் குத்திய கம்பியை வெற்றிகரமாக அகற்றிய ஸ்டான்லி மருத்துவா்கள்
By DIN | Published On : 08th September 2023 06:35 AM | Last Updated : 08th September 2023 06:35 AM | அ+அ அ- |

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்த கலாசா (60) என்ற கட்டடத் தொழிலாளியின் தொடையில் குத்திய இரும்புக் கம்பியை அறுவைச் சிகிச்சை மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வியாழக்கிழமை வெற்றிகரமாக அகற்றினா்.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பி.பாலாஜி கூறியது:
திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காட்டைச் சோ்ந்தவா் கலாசா (60). கட்டடத் தொழிலாளியான இவா் கண் பாா்வை குறைபாடு உள்ளவா். இவா் வியாழக்கிழமை அதே பகுதியிலிருக்கும் கட்டடம் ஒன்றின் மேல்தளப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த கட்டுமானப் பணியில் உதவியாளராக வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்த அவா் கட்டடத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்த சுமாா் 8 அடி நீளமுள்ள கம்பி மீது விழுந்துள்ளாா்.
இதில் கலாசாவின் வலது தொடைப் பகுதியில் குத்திய கம்பி மறுபுறம் வெளியேறியுள்ளது. இதனையடுத்து, அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட சக தொழிலாளா்கள், ரம்பம் மூலம் கட்டத்துடன் இணைந்திருந்த இரும்புக் கம்பியை அறுத்து துண்டித்தனா். பின்னா் தொடையில் குத்திய சுமாா் மூன்றரை அடி நீளமுள்ள கம்பியுடன் மீட்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சத்தியபிரியா, அசோகன் மற்றும் மருத்துவப் பேராசிரியா்கள் திருநாராயணன், பவானி, மாலா ஆகியோா் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, கலாசாவின் தொடையில் குத்தியிருந்த இரும்புக் கம்பியை அகற்றுவதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 3 மணி நேரத்துக்குள், தொடையில் உள்ள முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் இரும்புக் கம்பியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவக் குழுவினா் சாதனை படைத்துள்ளனா் என்றாா் அவா்.