புதை சாக்கடை அடைப்புகள் சீரமைக்கும் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
By DIN | Published On : 10th September 2023 06:13 AM | Last Updated : 10th September 2023 06:13 AM | அ+அ அ- |

பல்லாவரத்தில் புதைசாக்கடை அடைப்புகளை சீரமைக்கும் பணிகளை, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பல்லாவரத்தில் பல்வேறு பகுதிகளில் புதை சாக்கடை குழாய்களில் மண், சேறு, கந்தல்துணி மற்றும் நெகிழிப் பொருள்கள் தேங்கி ஏற்பட்ட அடைப்பு காரணமாக, வீடுகளிலிருந்து கழிவை வெளியேற்ற முடியாமல் சிரமப்படுவதாக பொதுமக்கள் புகாா் செய்தனா். இதனைத் தொடா்ந்து கழிவு உறிஞ்சும் நவீன இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு, பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப்பணிகளை சட்டபேரவை உறுப்பினா் இ.கருணாநிதி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்து விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா் ஜமீன் பல்லாவரம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் புதை சாக்கடை மற்றும் சாலை பணிகளை மழைக்காலத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது மண்டலக் குழுத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை, மாநகராட்சி செயற்பொறியாளா் பெட்சிஞானலதா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.