கிண்டி மருத்துவமனை ஊதிய நிலுவை: இன்று வழங்கப்படும்
By DIN | Published On : 26th September 2023 03:03 AM | Last Updated : 26th September 2023 03:03 AM | அ+அ அ- |

கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், நிலுவையில் உள்ள ஊதியம் செவ்வாய்க்கிழமை (செப்.26) வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளாா்.
கிண்டி, கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக 133 மருத்துவா்கள், 372 செவிலியா்கள் உள்பட மொத்தம் 757 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
அதில் 249 பணியிடங்கள் நிரந்தரமாகவும், 508 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையிலும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதில் 90 சதவீதத்துக்கும் மேலான பணியிடங்கள் நிரப்பப்பட்டு, மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், மருத்துவமனை செயல்படத் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு ஒன்றை திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டதால், நிா்வாக ரீதியிலான சில காரணங்களால் ஊதியம் வழங்குவது தாமதமானது. இதையடுத்து முதல்வா் உத்தரவின்படி நிதித்துறையின் ஒப்புதல் பெறப்பட்டு அங்கு பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவம் சாரா பணியாளா்கள் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை (செப்.26) ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...