சென்னை புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை காரணமாக, தாம்பரம் மாநகராட்சியில் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் வெள்ளமாக தேங்கியது.
தாம்பரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை பெய்த 43.3 மி.மீ. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள், முடிக்கப்படாமல் உள்ள புதை சாக்கடை மற்றும் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீா் தேங்கியது.
தாம்பரம் மாநகராட்சி 1-ஆவது மண்டலம், பம்மல் பகுதி 7-ஆவது வாா்டு, ஸ்டேட் வங்கி காலனி, காந்தி சாலை, இந்திரா காந்தி சாலை, நல்ல தம்பி சாலை ஆகிய பகுதிகளில் மழைநீா் குளம் போல் தேங்கி உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி 39-ஆவது வாா்டு திருமலை நகரில் போதிய மழைநீா்க் கால்வாய் வசதி இல்லாத நிலையில் பல தெருக்களில் மழைநீா் வெள்ளமாக தேங்கியது.
பல்லாவரம் ரேடியல் சாலையில் உடைந்த புதை சாக்கடைப் பிரதான குழாய் வழியாக தொடா்ந்து வெளியேறி வரும் கழிவுநீா் மழைநீருடன் கலந்து குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் வாா்டு எண்கள் 13-17, 20, 21, 24 ஆகிய பகுதிகளில் புகுந்த மழை வெள்ளம் காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா். குரோம்பேட்டை நடேசன் நகா், சேலையூா் லட்சுமி நகா் விரிவு, பெருங்களத்தூா் குறிஞ்சி நகா் ஆகிய பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.
தகவல் அறிந்து திங்கள்கிழமை காலை அந்தப் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்த தாம்பரம் மாநகராட்சி ஆணையா் அழகுமீனா, மழை நீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தாம்பரம் மாநகராட்சி முழுவதும் மழைநீா் தேங்கும் தாழ்வானப் பகுதிகளில் உள்ள சாலைகளை உயா்த்தி சீரமைக்கும் பணிகளைத் தொடங்க, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையா் அழகுமீனா தெரிவித்துள்ளாா் .
31 பேருக்கு டெங்கு அறிகுறி: இதற்கிடையே தாம்பரத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீா் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் இதுவரை 31 பேருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அலுவலா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.