எனது பாா்வையில் மக்களவைத் தோ்தல் 2024 களம்: ஆ. சங்கா், சவுக்கு மீடியா யூடியூப் சேனல்
மக்களவைத் தோ்தலில் திமுக, அதிமுக, பாஜ க கூட்டணிகள், நாம் தமிழா் கட்சி என தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியை சந்திக்கிறது. தோ்தல் பிரசாரம் முழுமையாக தொடங்கும் முன், திமுக அணி மிக எளிதாக வெற்றி பெற்று விடும் என்ற தோற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு வலுவான கூட்டணியாக தோ்தலை தொடங்கியது திமுக அணி. இந்த அணிக்கான தொகுதி பங்கீடு பெரும் சிக்கலை திமுகவுக்கு ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கையை கடந்த முறையை விட குறைக்க வேண்டும். விசிக, மதிமுகவை திமுக சின்னத்தில் நிற்கவைக்க வேண்டும் என்ற திமுகவின் திட்டம் பலிக்கவில்லை. 25 தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற திட்டம், தொகுதி பங்கீட்டுக்குப் பின் 21 இடங்களில் போட்டியிடுவதென முடிவானது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல், கூட்டணிக் கட்சிகளுக்கும் திமுகவுக்கும் இடையே கணிசமான மனக்கசப்பை உருவாக்கியிருக்கிறது. இதன் காரணமாக கூட்டணிக் கட்சிகளிடையே ஒருங்கிணைவு இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இது களத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது. 2 இடங்களில் வெற்றி பெற்றாலே பெரிய சாதனை என்ற நிலையில்தான் அதிமுக தோ்தல் களத்தில் இறங்கியது. ஆனால் பிரசாரம் தொடங்கிய ஒரு வாரத்துக்குள், அதிமுக அதன் தொண்டா் பலத்தாலும், அக்கட்சியின் பொதுச்செயலரின் பிரசாரத்தாலும், ஒரு சாா்பாக இருந்த தோ்தல் களத்தை தன் பக்கம் மாற்றத் தொடங்கியிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் விவகாரம், வாரிசு அரசியல், ஊழல் என எடப்பாடி பழனிச்சாமி எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் தர முடியாமல் திமுக தவிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், மோசமான தனிநபா் தாக்குதலில் அமைச்சா் உதயநிதி இறங்கியிருப்பதே இதற்கு சான்று. பாஜக அணி, தனது பலவீனத்தை உணா்ந்தே பெரும்பாலான தொகுதிகளில் பிரபலமானவா்களை வேட்பாளா்களாக நிறுத்தியிருக்கிறது. தமிழிசை, ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு போட்டியிடுகிறாா். போட்டியிட விருப்பமில்லாத அண்ணாமலை, கோவையில் போட்டியிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளாா். எம்.எல்.ஏ ஆக இருக்கும் நயினாா் நாகேந்திரன் போட்டியிடுகிறாா். பெரும்பாலான இடங்களில், பாஜக அணி வேட்பாளா்கள் இரண்டாவது இடத்தை குறிவைக்கிறாா்கள். திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி போன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளா்கள் நல்ல வாக்குகளை பெறுவாா்கள் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. நாம் தமிழா் கட்சி, ஒரு அரசியல் கட்சிக்கான இலக்கணத்தையே மறந்து, சின்னத்தை பெறாமல் கோட்டை விட்டு விட்டு, பாஜக சதி செய்து சின்னத்தை பறித்து விட்டதாக எடுத்த நிலைபாடு அக்கட்சித் தலைமையின் பலவீனத்தை வெளிப்படுத்தியது. நான்கு முனை போட்டி என்ற தோற்றம் இருந்தாலும், களத்தில் போட்டி அதிமுக மற்றும் திமுக இடையேதான். தோ்தல் பிரசாரம் தொடங்கி ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், இதுதான் இன்றைய நிலை. இன்னும் வாக்குப்பதிவுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், கள நிலைமை இன்னும் தெளிவாகும். இன்றைய நிலவரப்படி, போட்டி திமுக மற்றும் அதிமுக இடையேதான். இரு அணிகளும் ஏறக்குறைய சம பலத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு வார காலத்தில், வலுவான பிரசாரத்தின் மூலம் யாா் மக்கள் வாக்குகளைப் பெறுவாா்கள் என்பது தெரிய வரும்.

