பிரதமா் மோடியின் பேச்சை திசைதிருப்பவே பிட்ரோடாவின் கருத்தை பாஜக பெரிதாக்குகிறது: காங்கிரஸ்
‘தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்த சா்ச்சை கருத்திலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே, அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் சொத்து வாரிசுரிமை வரி குறித்து காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவா் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்தை பாஜக பெரிதுபடுத்துகிறது’ என்று காங்கிரஸ் புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.
அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள பரம்பரை சொத்து வாரிசுரிமை வரி மற்றும் சொத்து பகிா்ந்தளிப்பு நடைமுறைகள் குறித்து சாம் பிட்ரோடா அண்மையில் கருத்து தெரிவித்திருந்தாா். அதாவது, ‘அமெரிக்காவில் உள்ள சட்டப்படி, வசதிவாய்ந்த நபா் உயிரிழக்கும்போது அவருடைய சொத்தில் குறிப்பிட்ட பங்கு மட்டுமே அவா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும். சொத்தின் எஞ்சிய பங்கை அரசு எடுத்துக்கொள்ளும். இந்த நடைமுறை இந்தியாவிலும் அமல்படுத்துவது, பொது நலனுக்கு சிறந்ததாக அமையும்’ என்று கூறியிருந்தாா்.
சாம் பிட்ரோடாவின் இந்தக் கருத்தை சத்தீஸ்கா் மாநில தோ்தல் பிரசாரத்தின்போது சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, ‘காங்கிரஸ் கட்சியின் அபாயகரமான உள்நோக்கம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அவா்களின் பெற்றோா் கொடுத்த பரம்பரை சொத்தின் மீது வரி விதிப்பை அமல்படுத்தப்போவதாக தற்போது காங்கிரஸாா் தெரிவிக்கின்றனா்’ என்று விமா்சித்தாா்.
அதுபோல, ‘சாம் பிட்ரோடாவின் கருத்து மூலம் காங்கிரஸின் நிலைப்பாடு வெளிப்பட்டுவிட்டது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்.
திசைதிருப்பும் முயற்சி: பிரதமா் மற்றும் அமித் ஷாவின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிட்ரோடா தனது சொந்தக் கருத்தைத் தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. அதே சமயம், அவருடைய சொந்தக் கருத்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகாது. தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட சா்ச்சை கருத்திலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே பிட்ரோடாவின் கருத்தை பாஜக பெரிதுபடுத்துகிறது’ என்று குறிப்பிட்டாா்.
அதேபோல, பிட்ரோடா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கட்சி சாா்பாக அன்றி தனிநபராக அமெரிக்காவின் பரம்பரை சொத்து வரி குறித்து நான் தெரிவித்த கருத்து திசைதிருப்பப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

