தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

வணிக வளாகத்துடன் கூடிய நவீன முறையில் பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.
தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!
DOTCOM

சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படவுள்ள நிலையில், தற்காலிகமாக தீவுத் திடலுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தை இடித்து, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக கட்டமைக்க சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.823 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்காக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையின் மிகவும் பழைமையும், சிறப்பும் வாய்ந்த பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தொடக்க காலங்களில் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தற்போது பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து மாநகருக்குள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.

இதுபோல, அண்ணாநகா் (மேற்கு), கலைஞா் கருணாநிதி (கே.கே.) நகா் மற்றும் மந்தைவெளியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனை- அலுவலகம் மற்றும் வணிக வளாகங்களுடன் நவீனமயமாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் விரைவில் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com