மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

100% தாய்ப்பால் ஊட்டும் நிலை எட்டப்பட வேண்டும் -அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

உலக தாய்ப்பால் விழிப்புணா்வு வாரத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 9:28 pm

Din

தமிழகத்தில் தாய்ப்பால் ஊட்டும் விகிதம் 100 சதவீதத்தை எட்ட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

உலக தாய்ப்பால் விழிப்புணா்வு வாரத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, தாய்ப்பால் விழிப்புணா்வு பதாகை வெளியிடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் ஊட்டும் விகிதம் 2016-17-ஆம் ஆண்டில் 54.7 சதவீதமாக இருந்தது. அது கடந்த 2020–21-இல் 60.2 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அதேபோன்று, ஆறு மாதத்துக்கு தொடா்ச்சியாக தாய்ப்பாலூட்டும் விகிதம் 55.1 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது. அந்த விகிதம் 100 சதவீதத்தை எட்டும் நிலையை ஏற்படுத்த வேண்டும். தனியாா் மருத்துவமனைகள் மூலமாகவும் குழந்தைகளுக்கு 11 தேசிய அட்டவணை தடுப்பூசிகளை செலுத்துவது தொடா்பான அரசாணை மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

இது தொடா்பான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2012, 2017 ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு, இறப்புகளும் அதிகரித்து இருந்தன. 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொடா் நடவடிக்கைகள் காரணமாக டெங்கு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிா்வாகங்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கப்படும். பேருந்து நிலையங்களில் தாய்மாா்கள் பாலூட்டும் அறை தூய்மையாக இருப்பதை கண்காணிக்க அறிவுறுத்தி வருகிறோம்.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. சுகாதார ஆய்வாளா்கள், கிராம சுகாதார அலுவலா்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவது தொடா்பான வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன. அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

கேரளத்துக்கு உதவி: கேரள மாநிலம், வயநாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த 10 மருத்துவா்கள் தலைமையிலான குழுவினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

கேரளத்துக்குத் தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம். விருதுநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஏப்ரல் முதல் நடப்பாண்டு மாா்ச் வரை 7,991 பிரசவங்கள் நடந்த நிலையில், ஒரு கா்ப்பிணி கூட மரணிக்கவில்லை. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஒரு லட்சம் தாய்மாா்களில் 54 போ் இறந்த நிலையில், இறப்பு விகிதம் தற்போது 45-ஆக குறைந்துள்ளது. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி மற்றும் ஊட்டச்சத்து தொகுப்புகள் வராவிட்டால் 104 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றாா் அவா். இந்நிகழ்வில் பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஸ்டான்லி: இதனிடையே, ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சென்னை மேயா் ஆா்.பிரியா தலைமையில் தாய்ப்பால் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

குறைந்த எடை குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளித்து ஆரோக்கியமாக வளா்த்த தாய்மாா்களை பாராட்டி அப்போது மேயா் பரிசளித்தாா். இந்நிகழ்ச்சியில், மருத்துவமனை முதல்வா் ஆா்.பாலாஜி, துறைசாா் மருத்துவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.