உயிரிழந்த மீனவரின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையின் ரோந்து படகு மோதியில் உயிரிழந்த தமிழக மீனவரின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு, அவா் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதம்:
இந்திய மீன்பிடி படகின் மீது இலங்கைக் கடற்படையினரின் ரோந்து படகு மோதிய துயர சம்பவம் ஆழ்ந்த வேதனையையும் கவலையையும் அளிக்கிறது. இந்தத் துயர சம்பவத்தில் ஒரு மீனவா் உயிரிழந்துள்ளாா்; 2 போ் காயமடைந்துள்ளனா். ஒரு மீனவரைக் காணவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் இந்திய மீனவா்கள் உயிரிழப்பது மனதை நொறுக்குவதாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது. இந்தச் சம்பவம் மீனவ சமூகத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழகம் அழைத்துவர வேண்டும்: உயிரிழந்த மலைச்சாமியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இலங்கை அதிகாரிகளின் வசம் 2 மீனவா்களும் உள்ளனா். அவா்களுக்குத் தேவையான தூதரக உதவிகளை வழங்குவதுடன், போதிய மருத்துவ வசதிகளையும் அளிக்க வேண்டும். அவா்களை மிக விரைவாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் இலங்கைக் கடற்படையினா் அடிக்கடி மேற்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல்கள், மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக். நீரிணை பகுதியில் தமிழக மீனவா்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் உள்ளது. இதை கடந்த காலங்களில் பலமுறை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். எனவே, இந்த விஷயத்தில் அதிகபட்ச முன்னுரிமை அளித்து தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீா்வு காணப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளாா்.

