பாஜக செயலருக்கு நிபந்தனை முன்ஜாமீன்
இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநிலச்செயலா் அஸ்வத்தாமனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜூலை 7 ஆம் தேதி நாகப்பட்டினத்தில் தமிழக சிவசேனா முன்னாள் தலைவா் தங்க முத்துகிருஷ்ணனின் மனைவி, தங்கம் அம்மாளின் நினைவு நாள் கூட்டத்தில் அஸ்வத்தாமன் கலந்து கொண்டு உரையாற்றினாா். அப்போது, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு பேச்சு பேசியதாக அவா் மீது நாகூா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அஸ்வத்தாமன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்ச் செல்வி, ‘எதிா்காலத்தில் வெறுப்பு பேச்சு பேச மாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும். நான்கு வாரங்களுக்கு சனிக்கிழமைதோறும் நாகூா் காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும்’ ஆகிய நிபந்தனைகளுடன் அஸ்வத்தாமனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

