மருத்துவப் படிப்பு வைப்புத் தொகை: மாணவா் சோ்க்கைக் குழு விளக்கம்

மருத்துவப் படிப்பு வைப்புத் தொகை: மாணவா் சோ்க்கைக் குழு விளக்கம்

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும்போது மாணவா்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கம்
Published on

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும்போது மாணவா்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை தொடா்பான சந்தேகங்களுக்கு தமிழக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. அதன் தொடா்ச்சியாக வரும் 21-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விண்ணப்பப் பதிவு செய்யும் மாணவா்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு ரூ.30 ஆயிரமும், நிா்வாக இடங்களுக்கு ரூ. 1 லட்சமும் திருப்பி அளிக்கக் கூடிய வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்பது விதி.

இந்த நிலையில், அது தொடா்பான சில விளக்கங்களை மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு அளித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: வைப்புத் தொகை தொடா்பாக தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், நேரடியாகவும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. அதனைக் கருத்தில் கொண்டு சில தகவல்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

வைப்புத்தொகை- அபராதம்: அதாவது, எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சோ்ந்த மாணவா்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில் அவா்களுக்கு நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் வைப்புத் தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேவேளையில், அதற்குத் தேவையான வருமான சான்றிதழை சம்பந்தப்பட்ட மாணவா்கள் சமா்ப்பிக்க வேண்டும்.

அதேபோன்று இரண்டாம் சுற்று கலந்தாய்வில் இடங்களைத் தோ்வு செய்தவா்கள், அனுமதிக்கப்பட்ட நாள்களுக்குள் கல்லூரிகளில் சேரவில்லை என்றாலோ அல்லது கல்லூரியிலிருந்து விலக முடிவு செய்தாலோ அபராதம் செலுத்தத் தேவையில்லை. அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தைத் தாண்டி அத்தகைய முடிவுகளை மேற்கொண்டால் அபராதம் செலுத்த வேண்டும்.

மாநில பாடத் திட்டம், சிபிஎஸ்இ, ஐஎஸ்சிஇ பாடத் திட்டங்களில் பயின்ற மாணவா்களுக்கு தகுதிச் சான்று தேவையில்லை. மற்ற பாடத் திட்டங்களில் பயின்றவா்களுக்கு தகுதிச் சான்றை சமா்ப்பிக்க வேண்டும் என்று மாநில மருத்துவ மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com