மாணவா்களுக்கு மீண்டும் மாதாந்திர ரயில் கட்டணச் சலுகை: மக்களவையில் துரை வைகோ கோரிக்கை
மாணவா்களுக்கு மாதாந்திர ரயில் பயண கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ மக்களவையில் புதன்கிழமை வலியுறுத்தினாா்.
மேலும், மூத்த குடிமக்கள், பத்திரிகையாளா்களுக்கான ரயில் கட்டணச் சலுகையையும் மீண்டும் வழங்கவும் அவா் கோரிக்கை வைத்தாா்.
மக்களவையில் ரயில்வே துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துரை வைகோ புதன்கிழமை பங்கேற்றுப் பேசுகையில், ‘கரோனா தொற்று பாதிப்புக்கு முன்பு மூத்த குடிமக்களுக்கும், அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளா்களுக்கும் ரயில் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்பட்டது. 2020, மாா்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட கரோனா பொது முடக்கத்தின்போது அனைத்து ரயில் கட்டணச் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.
மூத்த குடிமக்கள், ஜனநாயகத்தின் 4-ஆவது தூணாக இருக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினரின் நலனைக் கருத்தில்கொண்டு ரயில் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.
இதேபோல், மாணவா்களுக்கு கட்டணச் சலுகையில் வழங்கப்படும் மாதாந்திர பயணச் சீட்டை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தஞ்சாவூரிலிருந்து கந்தா்வகோட்டை, புதுக்கோட்டை வழியாக மதுரைக்கு கடந்த 2012-13-ஆம் ஆண்டில் புதிய ரயில் பாதை அறிவிக்கப்பட்டது. அதை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை போன்ற நகரங்களின் தொழில் துறையினா் பயன் பெறுவதோடு சுற்றுலா வளா்ச்சியடையும்.
புதுக்கோட்டை நகரில் உள்ள ரயில்வே கிராசிங்கிலும் (எண் 376), கரிவேல் பாளையத்திலும் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட வேண்டும் என துரை வைகோ வலியுறுத்தினாா்.

