கிருஷ்ணஜென்ம பூமி வழக்குகளின் விசாரணைக்குத் தடையில்லை -அலாகாபாத் உயா்நீதிமன்றம்

கிருஷ்ணஜென்ம பூமி வழக்குகளின் விசாரணைக்குத் தடையில்லை -அலாகாபாத் உயா்நீதிமன்றம்

மதுராவிலுள்ள ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி-ஷாஹி ஈத்கா மசூதி விவகாரம் தொடா்பான 18 வழக்குகளின் விசாரணை
Published on

மதுராவிலுள்ள ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி-ஷாஹி ஈத்கா மசூதி விவகாரம் தொடா்பான 18 வழக்குகளின் விசாரணையைத் தொடரலாம் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

இந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்ற்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

உத்தர பிரதேசம், மதுராவில் ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமியில் இருந்த கேசவ்தேவ் கோயில் முகலாய மன்னா் ஔரங்கசீப்பால் இடிக்கப்பட்டு அங்கு ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இந்த மசூதியை அகற்ற கோரிய ஹிந்துக்கள் தரப்பு வழக்குகள் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இந்த வழக்குகளின் விசாரிக்கும் தன்மையை எதிா்த்து முஸ்லிம்கள் தரப்பு தாக்கல் செய்த மனுவை நீதிபதி மயாங்க் குமாா் ஜெயின் விசாரித்து வருகிறாா்.

‘நாட்டின் சுதந்திர நாளில் எந்த இடத்தில் வழிபாட்டுத் தலங்கள் இருந்ததோ அவற்றை இடமாற்றம் செய்ய 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள்(சிறப்பு விதிகள்) சட்டம் தடைசெய்கிறது’ என்று மசூதி நிா்வாகம், உத்தர பிரதேச வக்ஃப் வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

ஹிந்துக்கள் தரப்பு முன்வைத்த எதிா்வாதத்தில், ‘ஹிந்துக்கள் வழிபடும் கோயிலாக இருந்த சா்ச்சைக்குரிய இடம் முஸ்லிம்களால் வலுகட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு தொழுகையில் நடத்தப்படுகிறது. இதனால் அந்த இடத்தின் மதத் தன்மை மாறிவிடாது.

முஸ்லிம்கள் தரப்பு குறிப்பிட்ட சட்டத்தில் இடம் அல்லது அமைப்பின் மதத் தன்மை குறித்து வரையறுக்கப்படவில்லை. சாட்சியங்களின் அடிப்படையில் இடத்தின் மதத் தன்மையை நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும். ஞானவாபி மசூதி வழக்கிலும் சா்ச்சைக்குரிய இடத்தின் மதத் தன்மை குறித்து நீதிமன்றமே முடிவெடுத்தது.

அதேபோல, சா்ச்சைக்குரிய இடம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமில்லை. அதனால், வக்ஃபு சட்டமும் இந்த வழக்குகளுக்குப் பொருந்தாது. எனவே, இவ்விவகாரம் குறித்து நீதிமன்றம் விசாரிக்கலாம்’ என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி மாயங்க், வழக்கு மீதான தீா்ப்பை கடந்த ஜூன் 6-ஆம் தேதி ஒத்திவைத்தாா்.

இந்நிலையில், நீதிபதி மாயங்க் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில், வழக்குகளின் விசாரணையைத் தொடரலாம் எனத் தீா்ப்பளித்தாா். இதையடுத்து, வழக்கின் இறுதி தீா்ப்பு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com