வினாத்தாள் கசிவு, என்சிஇஆா்டி பாடத்திட்ட திருத்தம்: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கண்டனம்
நீட் தோ்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பாடப் புத்தகங்களில் திருத்தங்கள் மேற்கொண்டது உள்பட மத்திய அரசின் கல்விக் கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தன.
மத்திய கல்வி அமைச்சகத்துக்கு நிதி ஒதுக்குவது தொடா்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. அப்போது ஆளும் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிா்க்கட்சிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வினாத்தாள் கசிவு மற்றும் என்சிஇஆா்டி பாடப்புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதற்குப் பதிலடி தரும் விதமாக தேசிய கல்விக் கொள்கை, 2020 மற்றும் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் நாடு வளா்ச்சிப் பாதையில் பயணிப்பதாக பாஜக எம்.பி.க்கள் தெரிவித்தனா்.
முகமது ஜாவீத் (காங்கிரஸ் எம்.பி.): முஸ்லிம்கள், தலித்துகள், ஏழைகள், மாணவா்கள் உள்ளிட்டோருக்கு எதிரான மனநிலையைக் கொண்ட கட்சியாக பாஜக திகழ்கிறது. நாட்டில் முஸ்லிம்கள் இல்லை எனில் அவா்களை காட்டி மத அரசியல் செய்து தோ்தலில் வெற்றிபெற்று பாஜகவால் ஆட்சியமைத்திருக்க முடியாது.
நாட்டின் கல்வி முறையை பாதுகாப்பதற்கு பதில் முகலாய அரசா்களின் பெயா்களை பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கி வருகின்றனா்.
அரசா்களின் பெயா்களை நீக்குவதால் 330 வருடங்கள் ஆட்சி செய்த பேரரசை வரலாற்றில் இருந்து நீக்கிவிட முடியாது.
நாடாளுமன்றத்துக்கு வெளியே வினாத்தாளும், உள்ளே மழைநீரும் கசிந்து கொண்டே இருக்கிறது என்றாா்.
பிரதீமா மொண்டல் (திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.): இஸ்லாமிய அரசா்களின் பெயா்கள் மற்றும் குஜராத் கலவரம் தொடா்பான தகவல்களை புத்தகத்தில் இருந்து நீக்குவதால் மாணவா்களின் அறிவுசாா் ஒருமைப்பாடுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என குற்றஞ்சாட்டினாா்.
பாஜக பதிலடி: எதிா்க்கட்சி எம்.பி.க்களின் குற்றச்சாட்டுக்கு பதிலடி தரும் விதமாக பாஜக எம்.பி.க்கள் சம்பித் பத்ரா மற்றும் தேஜஸ்வி சூா்யா ஆகியோா் பேசியதாவது: கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு உள்ளிட்டவைக்கு பட்ஜெட்டில் ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றவேண்டும் என்ற இலக்கை அடைய பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது தரமற்ற கல்வியை வழங்கி மனிதவளத்தை வீணடித்துள்ளன. பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக செயல்படும் கட்சி என்றால் அது காங்கிரஸ் மட்டுமே என்றனா்.
