விரைவுப் போக்குவரத்துக் கழக தினக் கூலி தொழிலாளா்களுக்கு ஊதியம் உயா்வு -குறைந்தபட்சம் ரூ.882
விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தினக் கூலி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.882 ஊதியமாக வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் தொலைதூரம் செல்லும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு பணியாளா் பற்றாக்குறை காரணமாக தினக் கூலி ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.535 மட்டுமே வழங்கப்பட்டது.
இது குறைந்தபட்ச கூலி சட்ட விதி, போக்குவரத்து தொழிலாளா்களின் ஒப்பந்த விதிகள் உள்ளிட்டவற்றுக்கு முரணாக இருப்பதாக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
மேலும், குறைந்தபட்ச கூலி சட்டப்படி விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தினக் கூலி பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளா் தனி இணை ஆணையரும் வலியுறுத்தினாா்.
ஊதிய உயா்வு: இந்நிலையில், தினக் கூலி தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை அதிகரித்து வழங்கி விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொதுமேலாளா் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற வாரிய கூட்டத்தில் நிறைவேற்றிய தீா்மானத்தின் அடிப்படையிலும், கடந்த ஆண்டு ஜன. 2-ஆம் தேதி தொழிலாளா் நலத் துறை பிறப்பித்த அரசாணையின்படியும் ஓட்டுநா், நடத்துநா் பணிகளை ஒருசேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளா்களுக்கும், தொழில்நுட்ப பணியாளா்களுக்குமான குறைந்தபட்ச ஊதியத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, நாளொன்றுக்கு டிசிசி பணியாளா்களுக்கு ரூ.882, தொழில்நுட்பப் பணியாளா்களுக்கு ரூ.872 ஊதியமாக வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

