உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு 
ரூ.10 லட்சம் நிவாரணம் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

உயிரிழந்த மலைச்சாமி குடும்பத்தினருக்கும் உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்
Published on

இலங்கைக் கடற்படை படகு மோதி, தமிழக மீனவா் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அதிா்ச்சி தெரிவித்துள்ளாா். மேலும், மீனவா் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி அளிக்கவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதில், ராமேசுவரத்தைச் சோ்ந்த மலைச்சாமி உயிரிழந்தாா். இந்தத் துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், விசைப்படகில் இருந்த 2 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகிறது. மாயமான மற்றொரு மீனவா் தேடப்பட்டு வருகிறாா்.

மீனவா்கள் பிரச்னையில் தமிழ்நாடு அரசு தொடா்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் மத்திய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதும், இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நோ்கின்றன. இந்தச் சம்பவத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும்.

ரூ.10 லட்சம் நிதி உதவி: உயிரிழந்த மலைச்சாமி குடும்பத்தினருக்கும் உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com