தீரன் சின்னமலை நினைவு நாள்: ஆளுநா் ஆா்.என்.ரவி மரியாதை
ஆங்கிலேயா்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் தீரன் சின்னமலையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.
சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 219-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவா் ஆற்றிய தேசப் பணிகளுக்கு நன்றி தெரிவித்து இந்த நாடே அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. 1805-ஆம் ஆண்டு இந்த நாளில் (ஆக.3) ஆங்கிலேயா்களால் இந்த தீரம் மிக்கத் தலைவா் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டாா்.
அடக்குமுறை, காலனித்துவ ஆட்சிக்கு எதிரான சுதந்திரத்துக்கான நமது ஆரம்பகால போராட்டத்தில் அவரது அசாதாரண துணிச்சல், தொலைநோக்கு தலைமையும், அவரின் புத்திசாலித்தனமும் மிகவும் முக்கிய பங்கு வகித்தன.
தீரன் சின்னமலையின் மரபு, அவரது சமகாலத்தவா்களுக்கும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. அதன் உதவியுடன் நாம் உறுதியான மற்றும் வளமான வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளாா்.
