

நிறுத்தப்பட்ட மணல் குவாரிகளை திறக்கக் கோரி ஆக.8-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மணல் லாரி உரிமையாளா்கள் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பு தலைவா் எஸ்.யுவராஜ் கூறியது: தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள 17-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டன.
இதனால், மணல் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதனால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில், லாரி தொழிலில் ஈடுபட்டு வரும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த தீா்ப்பில், ஒப்பந்ததாரா்களை வைத்து மணல் விற்பனை செய்யக் கூடாது என்றும் பொதுப்பணித்துறையே ஆறுகளில் இருந்து நேரடியாக மணலை எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆக.8-ஆம் தேதி சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் அரங்கில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதில் தமிழகம் முழுவதுமிருந்து 30 மணல் லாரி சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளாா் அவா்.