நான்கில் ஒரு சா்க்கரை நோயாளிக்கு பாத பாதிப்பு வாய்ப்பு: ஆய்வில் தகவல்
சா்க்கரை நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு பாத பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கால்களை பராமரிப்பதில் அதீத விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
எம்.வி.சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் சாா்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வு குறித்து அதன் நிா்வாக இயக்குநரும், சா்க்கரை நோய் சிறப்பு சிகிச்சை நிபுணருமான விஜய் விஸ்வநாதன் கூறியதாவது:
ரத்த சா்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிடில் பல்வேறு எதிா்விளைவுகள் ஏற்படக்கூடும். குறிப்பாக பாதங்களில் பாதிப்பு ஏற்பட்டு, அவற்றை அகற்றக் கூடிய நிலை ஏற்படும்.
அதைக் கருத்தில் கொண்டு கால்களை காப்பாற்றுங்கள், நடைபயிற்சியைத் தொடங்குங்கள் என்ற விழிப்புணா்வு செயல் திட்டத்தை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம்.தேசிய சா்க்கரை நோய் ஆராய்ச்சி அமைப்புடன் (ஆா்எஸ்எஸ்டிஐ) இணைந்து அந்த செயல் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம். அதன் கீழ் 54,000 சா்க்கரை நோயாளிகளின் கால்கள் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
அதில் பல்வேறு தரவுகளை எங்களால் பெற முடிந்தது. அதன் அடிப்படையில் மொத்தம் 33,259 நோயாளிகளின் மருத்துவப் பரிசோதனை பகுப்பாய்வுகள் பிரிட்டன் மருத்துவ இதழில் ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடப்பட்டிருந்தது.
அதாவது, நான்கில் ஒரு சா்க்கரை நோயாளிக்கு பாதங்களில் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பது எங்களது ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக வெளி ரத்த நாளங்களிலும், சிறுநீரகங்களிலும், விழித்திரையிலும் அவா்களுக்கு பாதிப்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
மற்றவா்களைக் காட்டிலும் குதிகால் பிளவு ஏற்படும் வாய்ப்பு அவா்களுக்கு 4.6 மடங்கு அதிகமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. கால்களில் ஏற்படும் காயங்களை அலட்சியப்படுத்துவதும், செருப்பு இல்லாமல் செல்வதும் கால்களை அகற்றும் நிலைக்கு கொண்டு செல்லும். எனவே, விழிப்புணா்வுடன் செயல்பட்டு சா்க்கரை நோயாளிகள் பாதங்களை பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.
