வளா்ச்சிப் பணிகளுக்காக 10 ஆண்டுகளில் 1,700 சதுர கி.மீ. வனப்பரப்பு இழப்பு

வளா்ச்சிப் பணிகளுக்காக 10 ஆண்டுகளில் 1,700 சதுர கி.மீ. வனப்பரப்பு இழப்பு

1,733 சதுர கி.மீ. பரப்புளவு கொண்ட வனப்பகுதியை இழந்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
Published on

புது தில்லி, ஆக. 8: வளா்ச்சிப் பணிகளுக்காக கடந்த 10 ஆண்டுகளில் 1,733 சதுர கி.மீ. பரப்புளவு கொண்ட வனப்பகுதியை இழந்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் அளித்த பதிலில், ‘நாட்டின் மொத்த வனப்பகுதியின் பரப்புளவு அதிகரித்துள்ளது. அதைத் தொடா்ந்து அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், மணிப்பூா், நாகாலாந்து, மிஸோரம், மேகாலயத்தில் வனப்பகுதியின் பரப்பளவு குறைந்துள்ளது. ஆனால், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, கா்நாடகம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகரித்த வனப்பரப்பால் நாட்டின் வனப்பகுதி விரிவடைந்துள்ளது.

வளா்ச்சி நடவடிக்கைகளுக்காக கடந்த 10 ஆண்டுகளில் 1,733 சதுர கி.மீ. பரப்புளவு கொண்ட வனப்பகுதியை இழந்துள்ளோம். இதற்கு நிவாரணமாக அரசு மேற்கொண்ட நிலங்களைக் கையகப்படுத்தல் உள்பட காடு வளா்ப்பு நடவடிக்கைகளால் 21,761 சதுர கி.மீ. வனப்பரப்பு அதிகரித்துள்ளது’ என்றாா்.

நிலச்சரிவு ஆய்வு மாநில அரசின் பொறுப்பு

பேரிடரின்போது உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் வனப்பகுதி ஒட்டிய இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறித்து அரசு ஏதேனும் ஆய்வு நடத்துகிா? என ஆம் ஆத்மி கட்சி எம்.பி. நாராயண் தாஸ் குப்தா கேள்வி எழுப்பியிருந்தாா்.

அதற்கு பதிலளித்த அமைச்சா் பூபேந்திர யாதவ், ‘வனத்துறை ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். எனினும், நிலச்சரிவு சம்பவங்கள் பேரிடா் மேலாண்மை தொடா்பான விவகாரம் ஆகும். மாநில அரசுகள் அதை கவனிக்கின்றன.

வனப்பகுதியில் ஒரு திட்டம் செயல்படுத்துவதற்கு எந்தவொரு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அப்பகுதியின் மண் மற்றும் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதையும் வனவிலங்குகளின் நடமாட்டத்துக்கு தடை ஏற்படாததையும் அமைச்சகம் உறுதி செய்கிறது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com