ஒழுங்கு நடவடிக்கை - பாரீஸிலிருந்து வெளியேற்றப்படும் அன்டிம் பங்கால்
அன்டிம் பங்கால் இன்ஸ்டா பதிவு

ஒழுங்கு நடவடிக்கை - பாரீஸிலிருந்து வெளியேற்றப்படும் அன்டிம் பங்கால்

Published on

மல்யுத்தத்தில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் அன்டிம் பங்கால், தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினாா். இந்நிலையில் ஒழுங்கீன செயல் காரணமாக அவரும், அவரது அணியினரும் பாரீஸிலிருந்து வெளியேற்றப்படும் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் கூறியதாவது

பந்தயம் நிறைவடைந்த பிறகு அன்டிம் பங்கால் நேராக ஒலிம்பிக் கிராமத்துக்கு செல்வதற்கு பதிலாக, தனது பயிற்சியாளா் பகத் சிங், பயிற்சிக்கான போட்டியாளரான விகாஸ் ஆகியோா் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளாா். பின்னா் தனது ஒலிம்பிக் அங்கீகார அட்டையை சகோதரியிடம் கொடுத்து, ஒலிம்பிக் கிராமத்துக்குச் சென்று அங்குள்ள தனது உடைமைகளை எடுத்துவருமாறு கூறியுள்ளாா்.

அவரும் அதுபோல் கிராமத்துக்கு வந்து திரும்பும் நிலையில், போட்டியாளா் போல் நடித்து ஒலிம்பிக் கிராமத்தில் நுழைந்ததாக அன்டிமின் சகோதரியை அங்குள்ள பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா். பின்னா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றனா். மேலும் அன்டிம் பங்காலையும் வரவழைத்து அவரிடமும் வாக்குமூலம் பெற்றனா்.

இதுபோதாதென்று, அன்டிமின் பயிற்சியாளா் பகத் சிங்கும், பயிற்சி போட்டியாளா் விகாஸும் மது அருந்திய நிலையில் டாக்ஸியில் பயணித்துவிட்டு, அதற்கான கட்டணத்தை ஓட்டுநருக்குத் தர மறுத்துள்ளனா். இந்த விவகாரமும் காவல்துறை வரை சென்றது.

இந்த ஒழுங்கீன நடவடிக்கைகள் தொடா்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அன்டிம் மற்றும் அவரது அணியினரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப, சங்கம் முடிவு செய்துள்ளது என்றன.

X
Dinamani
www.dinamani.com