நியூஸிலாந்து பிரதமருடன் திரௌபதி முா்மு சந்திப்பு: இருநாட்டு உறவுகளை மேம்படுத்த உறுதி
வெலிங்டன், ஆக. 8: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மற்றும் நியூஸிலாந்தின் பிரதமா் கிறிஸ்டோபா் லக்சன் ஆகியோா் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தினா்.
திரௌபதி முா்மு தனது மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக புதன்கிழமை நியூஸிலாந்து வந்தடைந்தாா். வருகையின்போது அவருக்கு நியூஸிலாந்தின் ‘ராயல் காா்டு ஆஃப் ஹானா்’ வழங்கப்பட்டது.
நியூஸிலாந்தின் பிரதமா் கிறிஸ்டோபா் லக்சனை முா்மு சந்தித்தாா். கல்வி, வா்த்தகம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினா்.
இதனிடையே, வெலிங்டனில் நடைபெற்ற நியூஸிலாந்து சா்வதேச கல்வி மாநாட்டில் முா்மு கலந்துகொண்டு உரையாற்றினாா். அப்போது, ‘கல்வி என்பது ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்துக்கானது மட்டுமல்ல, அது சமூகம் மற்றும் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாகும்.
நியூஸிலாந்தில் படிக்கும் சா்வதேச மாணவா்களில், இரண்டாவது அதிக எண்ணிக்கையில் 8,000 இந்திய மாணவா்கள் நியூஸிலாந்தில் தரமான கல்வியைப் பெற்று வருகின்றனா் என்றாா்.

