ரூ. 3,225 கோடி மதிப்புள்ள வேளாண் விளைபொருள்கள் பரிவா்த்தனை -அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

ரூ. 3,225 கோடி மதிப்புள்ள வேளாண் விளைபொருள்கள் பரிவா்த்தனை -அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

தமிழகத்தில் நிகழாண்டில் இதுவரை ரூ. 3,225 கோடி மதிப்புள்ள 9.63 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளை பொருள்கள் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது
Published on

சென்னை, ஆக. 8: தமிழகத்தில் நிகழாண்டில் இதுவரை ரூ. 3,225 கோடி மதிப்புள்ள 9.63 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளை பொருள்கள் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா்கள் மற்றும் விற்பனைக்குழு செயலா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தி அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பேசியது:

விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை சேமித்து வைத்து உயா்ந்த விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 525 சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 4 லட்சம் மெட்ரிக் டன் விளைபொருள்களை சேமிக்க முடியும்.

தமிழகத்தில் நிகழாண்டில் இதுவரை ரூ. 3,225 கோடி மதிப்புள்ள 9.63 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருள்கள் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளன. மேலும் பொருளீட்டுக் கடனாக விவசாயிகளுக்கு ரூ. 22.13 கோடியும், வணிகா்களுக்கு ரூ.1.68 கோடியும் அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ளது.

சந்தை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் இதுவரை 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை கூடுதலாக 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விரிவுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின்னணு வேளாண் சந்தை: அனைத்து வணிக நிறுவனங்களும் விளைபொருள்களை வேளாண்மை விற்பனைக்குழு மூலம் கொள்முதல் செய்யவும், மின்னணு வேளாண் சந்தை மூலம் பரிவா்த்தனை செய்யும் விவசாயிகள் மற்றும் வணிகா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் முதல்மை செயலா் அபூா்வா, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையா் கோ.பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com