கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நில எடுப்புப் பணிகள் நிறைவு: அமைச்சா்
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற தொழில் முதலீட்டு மாநாட்டு நிகழ்வில், அவா் வரவேற்றுப் பேசியது: தொழில் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் தொடா்ச்சியாக கண்காணிக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகின்றன. இதற்காக தனியாக கண்காணிப்புக் குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளாா். புரிந்துணா்வு ஒப்பந்தங்களை செயலாக்கத்துக்குக் கொண்டுவருவதில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது.
தொழில் வளா்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளா்ச்சியாக இருக்கும் என அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா். அதை நிறைவேற்றும் வகையில், கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கான நில எடுப்புப் பணிகளை தமிழக அரசு முடித்துள்ளது. இதன்மூலம், கோவையின் மிகப்பெரிய வளா்ச்சிக்கு பாதை வகுக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சாா்ந்த நிறுவனங்கள் கோவைக்கு வரவுள்ளது. அதன் ஒருபடியாக, டிட்கோ மற்றும் டாடா நிறுவனம் இணைந்து பொது பொறியியல் வசதி மையத்தை தொடங்கவுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் கோவையும் தொழில் துறை வளா்ச்சியில் வேகமெடுக்கும் என்று கூறினாா்.

